ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதிருந்து சாப்பிட்டவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1418, 5995
குழந்தைச் செல்வம் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பேறு. இந்த பாக்கியம் இல்லாதவர்கள் இன்று பல கோடிகளை கொட்டிக் கொடுத்தும் குழந்தை கிடைக்காமல் பரிதவிக்கும் நிலையை காண்கிறோம். அதே நேரத்தில் குழந்தையும் கிடைத்து, அவர்களை வளர்ப்பதற்குப் போதிய பொருளாதாரம் இல்லையென்றால் பெற்றோரின் கதியும் அவ்வளவு தான்.
பல குழந்தைகளைப் பெற்றெடுத்து பண வசதியின்மையால் மிகப்பெரும் சிரமத்திற்கு ஆளவோர் இந்தியாவில் பெருமளவில் இருக்கின்றனர். குழந்தைகளை சரி வர வளர்க்க முடியாமல் படிக்க வைக்க முடியாமல் திணறும் பெற்றோர்கள், கடன் சுமை அதிகரித்து, தற்கொலை என்ற மாபாதகமான செயல்களுக்குச் சென்று விடுகின்றனர். இதனால் நிரந்தர நரகத்திற்குச் செல்லும் அவல நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது.
குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பெற்று விட்டால் பெற்றார்களுக்குப் பெரும் சிரம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை ஒழுக்க மிக்கவர்களாக வளர்த்து திருமணமும் செய்து வைப்பது இன்றைய கால சூழ்நிலையில் மிகப் பெரிய சிரமமாகப் பலர் கருதுகின்றனர்.
இன்னலாகக் கருதப்படும் இந்தப் பெண் குழந்தைகள், இவ்வுலகில் பாரமாக இருந்தாலும் அவர்களை நல்ல முறையில் வளர்த்து நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை வளர்ப்பதில் சிரமத்தை ஏற்றுக் கொண்டால் நாம் செய்யும் இந்தக் காரியத்துக்குக் கைமாறாக மறுமை நாளில் இந்தக் குழந்தைகள் நம்மை நரகத்திற்குப் போக விடாமல் தடுக்கும் திரையாக இருந்து சொர்க்கத்திற்கு அனுப்புபவர்களாக மாறுவார்கள். இக்கருத்தைத் தான் மேற்கூறிய நபிமொழி எடுத்துரைக்கிறது.
ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் ஒன்பது பெண் குழந்தைகளை விட்டு விட்டு இறந்தார்கள். இவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஜாபிர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கன்னிப் பெண்ணை திருமணம் செய்யாமல் விதவைப் பெண்ணை திருமணம் செய்தார்கள். விதவைப் பெண்ணுக்கு அனுபவம் இருக்கும். தம் சகோதரிகளை நல்ல முறையில் பராமரிப்பார், ஒழுக்கம் கற்பிப்பார் என்ற நம்பிக்கையில் கன்னிப் பெண்ணை விட்டுவிட்டு விதவைப் பெண்ணை தேர்வு செய்தார்கள். இதை நபிகளார் அவர்களும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள். (பார்க்க: புகாரி 4052, 5367, 2967)
அறியாமைக் காலத்தில் தான் பெண் குழந்தைகள் பிறப்பது கெட்ட சகுனமாகக் கருதப்பட்டது. மேலும் அவர்களை உயிருடன் புதைக்கும் கொடுமையும் நிழந்தது.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப் பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:58,59)
இவ்வாறு பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தவர்கள் மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, கடும் தண்டனை பெறுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன் 81:8,9)
பெண் பிள்ளைகளை பிறப்பதை விரும்பாதவர்களையும் அவர்களை உயிருடன் புதைத்தவர்களையும் கடுமையாகக் கண்டிக்கும் இஸ்லாம், சிரமங்களை ஏற்று, பெண் குழந்தைகளை ஒழுக்க மிக்கவர்களாக வளர்த்தால் நிச்சயம் அந்தப் பெற்றோருக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறுகிறது. எனவே பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கவலையை மறந்து, நமது இந்தக் குழந்தைகள் மறுமை வெற்றியின் படிக்கற்கள் என்பதை நம்பி அவர்களை நல்ல முறையில் வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment