Sunday, 24 February 2013

திருஷ்டிக்காக குழந்தைகளின் கன்னத்தில் கருப்புப் பொட்டை வைக்கலாமா ?


கேள்வி: திருஷ்டிக்காக குழந்தைகளின் கன்னத்தில் கருப்புப் பொட்டை தாய்மார்கள் வைக்கிறார்கள். மார்க்கத்தின் அடிப்படையில் இது தவறா?
பதில்: முஸ்லிம்கள் அனைவரும் எந்த ஒரு துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் அது அல்லாஹ்வின் மூலம் தான் வருகிறது என்று உளமாற நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை வந்து விட்டால் இது போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் தன்னால் ஓடிவிடும். குழந்தைக்குப் பொட்டு வைப்பதால் கண் திருஷ்டி வராது என்று அல்லாஹ்வின் விதியை மறந்தவர்கள் தான் நினைப்பார்கள். 

தாயத்து கட்டியிருப்பவனை நபி (ஸல்) அவர்கள், இணை வைப்பாளன் என்று கூறினார்கள். தீமைகளை அகற்றுபவன் அல்லாஹ் என்பதை மறந்து விட்டு, சாதாரண கயிறு அகற்றுவதாக அவன் நினைத்தது தான் இதற்குக் காரணம்.

இது போலவே அல்லாஹ்வின் மேல் வைக்க வேண்டிய நம்பிக்கையை கருப்புப் பொட்டின் மீது வைப்பதால் இதுவும் தடுக்கப்பட்டதாகி விடுகிறது. அல்லாஹ் பின்வரும் வசனங்களில் அவன் நாடினால் தான் தீமைகளோ அல்லது நன்மைகளோ ஏற்படும் என்று கூறுகிறான்.
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. (அல்குர்ஆன் 57:22)

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழி காட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 64:11)

மேலும் இச்செயல் மாற்றார்கள் கடைப்பிடிக்கும் மூடப் பழக்க வழக்கம். இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளுக்கு அணுவளவும் இடம் கிடையாது. அரபுகளிடத்தில் காணப்பட்ட ஏராளமான மூடநம்பிக்கைகளை இஸ்லாம் தான் ஒழித்தது. இஸ்லாம் எவ்வாறு மூடநம்பிக்கைகளை களைந்தெடுத்தது என்பதைப் பின்வரும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. 
மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஃபாவை) வலம் வந்தார்கள். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர.
அறிவிப்பவர்: உர்வா (ரலி)
நூல்: புகாரி (1665)


அன்சாரிகள் ஹஜ் செய்து விட்டு வரும் போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல் வழியாக செல்ல மாட்டார்கள். மாறாக வீட்டின் பின் வாசல் வழியாக வருவார்கள். அப்போது அன்சாரி களைச் சார்ந்த ஒருவர் (முன்)  வீட்டின் வழியே சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது, "உங்கள் வீடுகளுக்குப் பின் வாசல் வழியாக செல்வது நன்மையான காரியமன்று. மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். ஆகவே வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்'' (2:189) என்ற இறை வசனம் அன்சாரிகளாகிய எங்கள் விஷயத்தில் இறங்கியது.
அறிவிப்பவர்: பராஉ (ரலி)
நூல்: புகாரி (1803)

அல்பஹீரா என்பது (பால் கறக்கக் கூடாத ஒட்டகம் என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டகத்தின் பெயராகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். சாயிபா என்பது அரபுகள் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேய விட்ட ஒட்டகமாகும். ஆகவே அதன் மேல் சுமை ஏதும் சுமத்தப்படாது.
நபி (ஸல்) அவர்கள், "குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவர் நரகத்தில் தன் குடலை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதலில் சாயிபா ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து விட்டவர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (3521) 

இது போன்ற ஏராளமான மூட நம்பிக்கைகளை இஸ்லாம் களைந்து எடுத்திருக்கின்றது. எனவே திருஷ்டிக்காகப் பொட்டு வைப்பது என்பது இஸ்லாத்திற்கு முரணான மூட நம்பிக்கை. முஸ்லிம்கள் இதை அணுவளவும் உண்மை என்று நம்பி விடக் கூடாது.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts