மார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா? மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே! இதற்கு விளக்கம் அளிக்கவும்.
பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகக் கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்து கொள்ளும் மோதிரம் போன்றுள்ள அணிகலனுக்கு மெட்டி என்று கூறுகின்றனர்.
இந்த அணிகலனை, பெரும்பாலும் மாற்று மதத்தில் திருமணமானதற்கு அடையாளமாக அணிகின்றனர். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்திற்கு அடையாளமாக இதை அணியவில்லை. சாதாரண அணிகலனாக அணிந்துள்ளனர்.
"நபி (ஸல்) அவர்கள் ஒரு பெருநாள் அன்று பெண்கள் பகுதியில் தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டபோது மோதிரங்களையும் மெட்டிகளையும் பிலாலின் ஆடையில் அப்பெண்கள் போடலானார்கள்'' என்று புகாரி (979, 4895) ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
மெட்டியை மதச்சடங்காக இல்லாமல் அது ஒரு அணிகலன் என்ற அடிப்படையில் அணிந்து கொள்ளலாம். எப்படி ஒரு மோதிரத்தை விரும்பிய போது போட்டுக் கொண்டு விரும்பிய போது கழற்றி விடுகிறோமோ அதே அடிப்படையில் இதையும் பயன்படுத்தலாம். மேலும் திருமணம் ஆனவர்கள் என்றில்லாமல் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்; எந்த விரலிலும் அணியலாம் என்ற அடிப்படையில் போட்டுக் கொள்வதில் தவறில்லை.
No comments:
Post a Comment