Saturday, 16 February 2013

(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி)

5189. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 
(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர். 
(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி)
முதலாவது பெண் கூறினார்: 

என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அதை மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை.122 

இரண்டாவது பெண் கூறினார்: 

நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்று கூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங் குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும். 

மூன்றாவது பெண் கூறினார்: 

என் கணவர் மிகவும் உயரமான மனிதர் அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரின் காதுக்கு எட்டி)னால். நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மெளனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) 

நான்காவது பெண் கூறினார். 

என் கணவர் (மக்கா உள்ளிட்ட) 'திஹாமா' பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை; கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை; கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை; (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.

ஐந்தாவது பெண் கூறினார்: 

என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். 123

ஆறாவது பெண் கூறினார்: 

என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமலும் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலம்) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக் கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை. 124 

ஏழாவது பெண் கூறினார்: 

என் கணவர் 'விவரமில்லாதவர்' அல்லது 'ஆண்மையில்லாதவர்', சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். 

எட்டாவது பெண் கூறினார்: 

என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்து போல் மணக்கக் கூடியவர்.

ஒன்பதாவது பெண் கூறினார்: 

என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு வீட்டுமுற்றத்தில்) சாம்பலை நிரைத்துவைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அரும்லேயே வீட்டை அமைத்துக் கொண்டவர். 

பத்தாவது பெண் கூறினார்: 

என் கணவர் செல்வந்தர் எத்துணை பெரும் செவ்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாள்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முனனிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதிசெய்து கொள்ளும். 

பதினொன்றாவது பெண் கூறினார்: 

என் கணவர் (பெயர்) அபூ ஸர்உஅபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது) 'ஷிக்' எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பரும்னாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.

(என்கணவரின் தாயார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் வீட்டுக்கு களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும் அவரின் வீடு விசாலமானதாகவே இருக்கும். 
(என் கணவரின் புதல்வர்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று (சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை(இறைச்சி) அவரின் பசியைத் தணித்துவிடும். (அந்த அளவிற்குக் குறைவாக உண்ணுவர்.) 
(என் கணவரின் புதல்வி) பின்த் அபீ ஸர்உ எத்தயைவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரின் ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள். 

(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.) 

(ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். 

அந்தக் குழந்தைகள் அவளுடைய இடைக்குக் கீழே இரண்டு மாதுகளங் கனிகளை வைத்து விளையாட்டிக் கொண்டிருந்தனர். எனவே, (அவளுடைய கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்குக் செய்துவிட்டு, அவளை மணந்தார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். 

அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) 'கத்' எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்தார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டு வந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, 'உம்மு ஸாஉவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன்(தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு'' என்றார். 

(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக் கூட அவை நிரப்பமுடியாது (என்று கூறி முடித்தார்.) 
ஆயிஷா(ரலி) கூறினார்: 

(என்னருமைக் கணவரான) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), '(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்' என்றார்கள். 125 
அபூ அப்தில்லாஹ் (புகாரி ஆகிய நான்) கூறுகிறேன். 
மற்ற சில அறிவிப்புகளில் சிற்சில வார்த்தைகள் மாறியுள்ளன

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts