Tuesday, 26 March 2013

இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை?



இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் எதையும் கொடுக்காமல் ஆண்களே அனைத்தையும் எடுத்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் இப்படியொரு அற்புத சட்டத்தை அல்-குர்ஆன் வழக்கில் கொண்டு வந்தது.

குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. அல்-குர்ஆன் (4:7) 

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு. என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். அல்-குர்ஆன் (4:11) 

வாரிசுரிமை சட்டத்தில் ஆண்களுக்கு கிடைப்பதில் பாதி, பெண்களுக்கு கிடைக்கும் என்று அல்-குர்ஆன் கூறுவதைப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் பாரபட்சம் காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

1.இஸ்லாமிய சமூக குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களில் கூட பெரும்பாலும் இதே நிலைமை தான்.

2.பெற்றோர்கள் தள்ளாத வயதில் ஆன் மக்களால் தான் பராமரிக்கப்படுகின்றனர். பெண்கள் தமது கணவனின் பெற்றோர்களைத் தான் பராமரிக்க முடியும். பெற்றோர் பொருள் திரட்ட முடியாத நிலையை அடையும் போது அவர்களை கவனிப்பதும் மகன்கள் தான். எனவே அவர்களுக்கு இரு மடங்கு அளிப்பது நியாயம்தான்.

3.ஒரு பெண் தனது புகுந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டால் தனது சகோதரனின் தயவில் வாழும் நிலை ஏற்படும். எனக்கு கிடைத்த சொத்தின் அளவு தான் உனக்கும் கிடைத்து எனவே உன்னை நான் எதற்கு பராமரிக்க வேண்டும் என்று சகோதரன் நினைக்காமல் அன்புடன் அவளை அரவணைக்க இந்த இரண்டுக்கு ஒன்று என்ற இந்த பாரபட்சம் அவசியமாகிறது.

4.தந்தையின் சொத்துக்களை பெருக்குவதில் பெண்களை விட ஆண்களே பெரிதும் பங்காற்றி வருகின்றனர். தந்தை விட்டு சென்ற சொத்துக்களில் அவர் சம்பாத்தித்தை விட அவரது மகன்களின் உழைப்பால் அதிகம் பெருகி இருக்கும். மகள் பெரும்பாலும் சொத்தை வளர்ப்பதில் பங்கெடுக்கமாட்டாள். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

5.இவை தவிர பெண்களுக்காக தந்தை நகை மற்றும் ஆபரணங்களை செய்து போடுகிறார். இது அலங்காரப் பொருள் மட்டுமின்றி பெரிய சொத்தாகவும் இருக்கிறது. இது போன்ற பொருட்கள் ஆண்களுக்கு வழங்கப்படுவதில்லை. (இருந்தாலும் ஆண்களை படிக்க வைப்பதற்கு ஒரு பெருந்தொகை செலவழிக்கப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்) இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

6.ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கினால் பெற்றோரை முதிய வயதில் நாம் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆன் மக்களுக்கு தோன்றும். புகுந்த வீட்டில் வாழும் பெண்களால் பெற்றோரை கவனிக்க முடியாமல் போகும். இதனால் முதியோர் இல்லம் தான் பெருகும். பெற்றோர் நாதியற்று விடுவார்கள். இதனை எல்லாம் கவனத்தில் கொண்டே இஸ்லாம் ஆண்களுக்கு சொத்தில் இரண்டு பங்கும் பெண்களுக்கு (நகை போன்ற ஆபரணங்கள் கொடுத்திருந்ததால் கூட) ஒரு பங்கும் கட்டாயம் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

முஸ்லிம்களே! நாம் உண்மையான முஹ்மின்களாக அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடியவர்களாக இருந்தால் மேலும் மறுமை தான் நம்முடைய குறிக்கோளாக இருந்தால் மேற்கூறிய விசயத்தில் நீதமாக நடக்க வேண்டியது நம்முடையக் கடமை.

நாம் மேற்கூறிய விசயத்தில் நடுநிலை தவறி இருந்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை வழங்கி விட வேண்டும். இல்லையென்றால் அடுத்தவரின் சொத்தை அவர்களுக்கு சேர வேண்டிய பாகத்தை அநியாயமாக பறித்துக் கொண்ட பாவத்திற்கு ஆளாகி விடுவோம். மேலும் அவ்வாறு பறிக்கக் கூடிய பொருளாதாரம் நமக்கு ஹலாலானதா என்பதையும் நாம் சிந்திக்க கடைமைப்பட்டுள்ளோம். திருடுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

அல்லாஹ்வின் உதவியை தவிர வேற எந்த உதவியும் கிடைக்காத மறுமை நாளை எண்ணிப் பார்ப்போம். ஹராமான வழியில் பொருளாதாரம் சேர்ப்பதை தவிர்ப்போம். அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழியில் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் நம் பாதையை அமைத்துக் கொள்வோம்.

S.அப்பாஸ் அலி M.I.Sc, பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் என்ற நூலிலிருந்து.

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/Kudumbaviyal/ 

பாகம் 29 பார்க்க இஸ்லாத்தில் சொத்துரிமை மற்றும் பாகப்பிரிவினை பற்றி சகோதரர் பிஜே அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் தொடரில் விளக்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts