Tuesday, 26 February 2013

துணைவியா? துறவியா?


மனித வாழ்வில் மிக முக்கியமான மற்றும் மட்டற்ற ஆனந்தத்தைத் தரக் கூடிய திருமணம் என்ற மகிழ்ச்சியான நிகழ்விற்குப் பிறகு குடும்ப வாழ்வில் மிகவும் அதிகமாக சந்திக்கப்படும் பிரச்சனை மாமியார், மருமகள் பிரச்சனை தான். 

இன்றைய இயந்திர வாழ்க்கையில் கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்து வருவதால் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தளவிற்கு இப்பிரச்சனை இன்று இல்லை என்றாலும் பரவலாக இப்பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கத் தான் செய்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டு நிம்மதியை இழக்க நேரிடுவது ஆண்கள் தான்.

வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வுகளை தரக் கூடிய இஸ்லாமிய மார்க்கம் இப்பிரச்சனைக்கும் தெளிவான முடிவை சொல்லத் தான் செய்கிறது. இந்த மாமியார், மருமகள் பிரச்சனைக்கு மிக முக்கியக் காரணமாக அமைவது மாமியார்களின் அணுகுமுறை தான்.

பல துயரங்களைச் சுமந்து பெற்று, வளர்த்தெடுத்த தன்னுடைய பிள்ளை தன்னை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தன் பிள்ளை அவனுடைய மனைவியுடன் பாசத்தோடு இருப்பதை ஒரு தாய் பரவலாக ஏற்றுக் கொள்வதில்லை. தன் மனைவி மீது கொண்டுள்ள பாசம் எங்கே தன்னைக் கவனிப்பதை விட்டும் அவனுடைய கண்களை மறைத்து விடுமோ என்ற அச்சம் தான் காரணம். 

ஆனால் படைத்த வல்ல ரஹ்மானோ இயல்பாகவே பெண்கள் மீது ஆண்களை மோகம் கொள்ளக்கூடியவர்களாக படைத்திருக்கிறான். மேலும் குறிப்பாக தன்னுடைய துணைவியின் மீது பாசத்தை ஏற்படுத்தி தந்தவனும் அவனே.

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது.
(அல்குஆன் 3:14)

"அவனே உங்களை ஒரே ஒருவரி-ருந்து படைத்தான். அவரி-ருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்'' என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.
(அல்குஆன் 7:189)

நீங்கள் அமைதி பெற உங்களி-ருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குஆன் 30:21)

எனவே ஒரு ஆண்மகன் தன் மனைவியுடன் மகிழ்ச்சியோடு இருக்கும் ஏற்பாட்டை வல்ல ரஹ்மான் தான் ஏற்படுத்தியிருக்கிறான். இது மட்டுமில்லாமல் தன்னுடைய கணவனை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பு ஒரு நல்ல மனைவிக்கு உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.
அறிவிப்பவர்: உமர் (ரலீ)
நூல்: அபூதாவூத் 1412

எனவே கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பதைத் தடுப்பதற்காக, தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமல் தன்னுடைய மருமகளை எல்லா சுகங்களையும் இழந்து துறவியாக வாழச் செய்யாமல் இருந்தால் இப்பிரச்சனை பெரும்பாலும் குறைந்து விடும். இல்லையெனில் தன்னுடைய மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழத் தடையாக இருப்பதால் மகனே தாயை வெறுத்து, அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய மறுக்கும் மோசமான நிலை கூட ஏற்பட்டு விடலாம்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts