மதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் நின்று, "அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்!'' என்று கூறி விட்டு, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதை (ஆட்சிப் பொறுப்பை) விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா? இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா? இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்டார்கள்
.
பிறகு, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் நோன்பாளியாகவும் தொழுபவராகவும் உறவினர்களுடன் இணங்கி வாழக் கூடியவராகவும் நான் உங்களை அறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை எந்தச் சமுதாயம் தீயவனாகக் கருதுகிறதோ அந்தச் சமுதாயமே கெட்ட சமுதாயமாகும்'' என்று கூறி விட்டு இப்னு உமர் (ரலி) சென்று விட்டார்கள்.
இப்னு உமர் நின்ற செய்தி ஹஜ்ஜாஜுக்குத் தெரிய வந்த போது அங்கு ஆளனுப்பி பேரீச்ச மரத்திலிருந்து அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை இறக்கச் செய்தான். பின்னர் அவரை யூதர்களின் மண்ணறையில் போட்டான்.
பின்னர் அவர்களது தயார் அஸ்மா (ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் ஒரு ஆளை அனுப்பி, தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அதை ஏற்க அஸ்மா (ரலி) மறுத்து விட்டார்கள்.
பின்னரும் ஆளனுப்பி, "வர மறுத்தால் உன் கொண்டையைப் பிடித்து இழுத்து வருபவரை அனுப்புவேன்'' என்று சொல்லியனுப்பினான். அப்போதும் மறுத்து, "என் கொண்டையைப் பிடித்து இழுத்து வரும் நபரை அனுப்பும் வரை உன்னிடம் வரமாட்டேன் (முடிந்தால் செய்து பார்)'' என்றார்கள்.
"என் காலணிகளைக் காட்டுங்கள்'' என்று கூறி காலணியை அணிந்து கொண்டு விரைந்து சென்றான். அஸ்மா (ரலி) அவர்களின் வீட்டில் நுழைந்து "அல்லாஹ்வின் விரோதியை என்ன செய்தேன் என்று பார்த்தாயா?'' என்றான்.
அதற்கு அஸ்மா (ரலி), "நீ அவனது உலக வாழ்க்கையை நாசமாக்கி, உன் மறுமை வாழ்க்கையை வீணாக்கி விட்டாய்'' என்று கூறினார்கள். பின்னர், "சகீஃப் என்ற பகுதியிலிருந்து ஒரு பொய்யனும், ஒரு அழிவை ஏற்படுத்துபவனும் வருவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பொய்யனை நாங்கள் பார்த்து விட்டோம். அழிவை ஏற்படுத்துபவன் நீதான் என்று எண்ணுகிறேன்'' என்று அஸ்மா (ரலி) கூறினார்கள். இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் எந்தப் பதிலும் சொல்லாமல் சென்று விட்டான்.
அறிவிப்பவர்: அபூ நவ்ஃபல்
நூல்: முஸ்லிம் (4617)
ஹிஜ்ரீ 63ஆம் ஆண்டு யஸீத் பின் முஆவியா இறந்த போது அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் தடுத்தார்கள். இஸ்லாமியப் பகுதிகள் அனைத்திலும் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மர்வான் பின் ஹகம் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சிரியா, எகிப்து பகுதியை கைப்பற்றினார்.
அவருக்குப் பின்னர் அப்துல் மலிக் பின் மர்வான் பொறுப்பேற்றார். அவர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவனை அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை எதிர்த்துப் போராட அனுப்பி வைத்தார். ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவன் அவர்களைப் பிடித்து சிலுவையில் ஏற்றினான். இந்தச் சம்பவம் தான் மேற்கூறிய ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிகச் சிறந்த நபித் தோழராக விளங்கிய அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களின் தாயார் தான் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள்.
நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களில் முதலிடம் பிடித்த அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வியார் அஸ்மா (ரலி). இவர் ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி ஆவார். எனினும் இருவருக்கும் தாய் வேறு, தந்தை ஒன்று. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் பெயர்: உம்மு ரூமான், அஸ்மா (ரலி) அவர்களின் தாயார் பெயர்: குதைலா. இவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.
நபித்தோழியர்களில் மிகச் சிறந்தவராக அஸ்மா (ரலி) திகழ்ந்தார்கள். இஸ்லாத்தை ஆரம்ப காலத்திலேயே ஏற்றவராகவும் இருந்தார்கள். வீரமிக்க பெண்மணியாகவும் திகழ்ந்தார்கள்.
அவர்களின் வீரத்திற்கு நாம் மேற்கூறிய ஹதீஸே சிறந்த சான்றாகும். கொடுங்கோலன் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமே தன் வீரத்தை வயது முதிர்ந்த காலத்திலும் எடுத்துக் காட்டிய வீரப் பெண்மணி அஸ்மா (ரலி).
தன் மகனை பேரீச்ச மரத்தில் சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்தியவன் அழைத்த போது மறுத்து, மீண்டும் எச்சரித்து அழைத்த போதும், "முடிந்தால் பார்த்துக் கொள்' என்று சொன்ன வீர மங்கை அஸ்மா (ரலி) அவர்களுக்கு அப்போது கண் பார்வை கூட இல்லை. நூறு வயதை எட்டிய அவர்களுக்கு ஒரு பல் கூட விழவில்லை என்பதும் புத்தி தடுமாறவில்லை என்பதும் கூடுதல் சிறப்பு.
தன்னையும் கூட கொடுமைப்படுத்தலாம் என்பதை அறிந்திருந்த அஸ்மா (ரலி) அவர்கள் அவனுக்குப் பயப்படாமல் கொடுங்கோலனுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியைச் சுட்டிக்காட்டி, "அழிவை ஏற்படுத்துபவன் நீ தான்' என்று தெளிவாகக் கூறிய வார்த்தைகள் அவர்களின் வீரத்தின் வெளிப்பாடு!
"அநீதி இழைக்கும் மன்னனுக்கு முன்னால் சத்தியத்தைச் சொல்வது சிறந்த ஜிஹாத்' என்ற நபிமொழிக்கு ஏற்ப சத்தியத்தை தைரியமாகச் சொன்ன அஸ்மா (ரலி) அவர்களைப் போல் அநீதிக்கு எதிராக பெண்களும் போராட களத்தில் இறங்க வேண்டும்
No comments:
Post a Comment