
இணை வைப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ்
தெளிவாகக் கூறி விட்டான். எனவே எந்தக் காரணம் கூறியும் அதை நியாயப்படுத்த முடியாது.
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத்
செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை
அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால்
அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள்
அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும்
அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்!
அவர்களுக்குய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது
உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண
ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள்
செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன்
தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 60:10)
(அல்குர்ஆன் 60:10)
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு இணை கற்பிக்கும் மாப்பிள்ளைகள்
ஹலால் இல்லை என்று இந்த வசனத்தில் கூறுகின்றான். இதற்குப் பிறகு எப்படி அவர்களிடம்
திருமண உறவு வைத்துக் கொள்ள முடியும்? இணை
கற்பிக்காத நிலையில் மற்ற தவறுகளைச் செய்யக் கூடியவர்கள் என்றால் அதைப்
பரிசீலிக்கலாம். ஆனால் இணை கற்பிப்பவர் என்று தெளிவாக தெரிந்து அவர்களுக்குப் பெண்
கொடுப்பது இறைவனின் கட்டளைக்கு மாற்றமான செயலாகும்.
இணை கற்பிக்கும் குடும்பங்களில் வாழ்க்கைப்படும் பெண்கள்
தங்களது கொள்கையை விட்டு விட்டு கணவனின் மார்க்கத்தையே பின்பற்றும்
நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள் என்பதை நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம்.
அதையும் மீறி கணவன் வீட்டில் தன் கொள்கையைப் பின்பற்றினால் அவளது வாழ்க்கை
கேள்விக்குறியாகி விடும். இது தான் யதார்த்தம்.
இவ்வாறிருக்கையில் அங்கு திருமணம் செய்து கொடுப்பது, அவர்களைத் தெரிந்தே நரகத்தில் தள்ளுவதைப்
போன்றதாகும். இவ்வுலக வாழ்க்கையில் திருமணம் தாமதமாகின்றது என்பதை மட்டும்
பார்த்து, அந்தப் பெண்ணுடைய மறுமை
வாழ்க்கையை வீணாக்கி விடக் கூடாது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தி னரையும்
நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ்
ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.
(அல்குர்ஆன் 66:6)
(அல்குர்ஆன் 66:6)
நம்மை மட்டுமல்லாது நமது குடும்பத்தினரையும் நரக
நெருப்பிலிருந்து காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை இந்த வசனம்
தெளிவுபடுத்துகின்றது.
எனவே இணை கற்பிப்பவர்களுடன் கண்டிப்பாக திருமண உறவு
வைத்துக் கொள்ளக் கூடாது.
உள்ளூரில் மாப்பிள்ளை கிடைக்காத பட்சத்தில் வெளியூரில்
திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்.
இது போன்ற நிலை ஏற்படுவதற்குக் காரணம், ஏகத்துவ வாதிகள் என்று கூறிக் கொள்வோர் ஏகத்துவக் கொள்கையை
ஏற்றுக் கொண்ட பெண்களை மணம் முடிக்காமல் மற்றவர்களைத் தேடிச் செல்வது தான்.
இத்தகையவர்கள் இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.
No comments:
Post a Comment