அருள்மறை குர்ஆன் கூறுகிறது:
"அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்." (அல்குர்ஆன், 025:054)
ஒன்று: இரத்த சம்பந்தப்பட்ட உறவு.
இரண்டு: திருமண சம்பந்தமான உறவு.
ஆக மனிதர்களிடையே இரண்டு வகையான உறவுகளை ஏற்படுத்தியிருப்பதாக 025:054வது வசனத்தில் இறைவன் கூறுகிறான். திருமண உறவால் ஏற்படும் சந்ததிகளுக்கு தாய், தந்தை வழி உறவுகள் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளாய் மலருகின்றன. தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி சிறிய, பெரிய தந்தைகள், மாமா மாமிகள், சின்னம்மா, பெரியம்மாக்கள், தாய், தந்தை வழிப் பாட்டிகள், தாத்தாக்கள் எனும் உறவுகள் ஏற்படுவது போல திருமண உறவின் மூலமும் மாமனார், மாமியார் மைத்துனர்கள். மைத்துனிகள் எனும் உறவுகள் ஏற்படுகின்றன.
இந்த இரண்டு உறவுகளுக்கும் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்களையும் இஸ்லாம் விவரிக்கின்றது. இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளை ஏற்படுத்துவதே இந்தத் திருமண உறவு தான். ஆனாலும் திருமண உறவை முறித்துக்கொள்ள முடியும், இரத்த உறவை முறித்துக் கொள்ள முடியாது, (அதை இஸ்லாம் தடை விதித்திருக்கிறது.)
இனி கேள்விக்கு வருவோம்.
அவர்களை அவர்களின் தந்தையருடனேயே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது! (அல்குர்ஆன், 033:005)
இன்னாரின் மகன் என்று தந்தையின் பெயர் தெரிந்திருக்க அவரின் தந்தையின் பெயருடனேயே அழைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இங்கே வளர்ப்புப் பிள்ளைகள் பற்றியே சொல்லப்பட்டாலும், இது அனைவரையும் அவரவரின் தந்தையின் பெயருடன் சேர்க்க வேண்டும். இரத்த சம்பந்தமான தந்தையல்லாதவரின் (வளர்ப்புத் தந்தையாக இருப்பவரின்) பெயரை தெரிந்து கொண்டே தந்தையாகச் சேர்த்து சொல்லக்கூடாது, அப்படிச் சொல்வது அநீதியாகும் என்பதையே அல்குர்ஆன் (033:005) வசனம் உணர்த்துகிறது. மேலும், தந்தை இல்லை என்று தெரிந்துகொண்டே தனக்குத் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை என்று கூறினால் சுவனத்தின் வாடையைக்கூட அனுபவிக்க முடியாது என்று ஹதீஸ்கள் எச்சரிக்கின்றன.
இதுபோன்ற எச்சரிக்கைகளாலேயே ''ஒரு பெண் தன் பெயரோடு கணவனின் பெயரையும் சேர்த்து எழுதலாமா?'' என்ற கேள்விகள் எழுகின்றன.
ஒரு பெண் தனது பெயரோடு தந்தையின் பெயரைச் சேர்த்து எழுதுவதற்கு எவ்வாறு தடை இல்லையோ, அதுபோல் ஒரு பெண் தனது பெயரோடு கணவனின் பெயரையும் சேர்த்து எழுதிக்கொள்ள இஸ்லாத்தில் தடையில்லை!
அல்குர்ஆனில்...
''இம்ரானின் மனைவி'' 003:035
''அஜீஸின் மனைவி'' 012:030
''ஃபிர்அவ்னின் மனைவி'' 028:009
''நபியுடைய மனைவிகளே!'' 033:030
''நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும்'' 066:010
மேற்காணும் திருமறை வசனங்கள் பெண்களை இன்னார் மனைவி என்று அடையாளப்படுத்துவது போல் பல்வேறு நபிமொழிகளும் அதற்கான வழியைக் காட்டுகின்றன.
''...........பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை....'' (புகாரி, 3411, 3769)
இம்ரானின் மகள் மர்யம்.
ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா.
முஹம்மதின் மகள் ஃபாத்திமா என்று தனது பெயரோடு தந்தையின் பெயரைச் சேர்த்துக் கொள்வது போல், முஹம்மதின் மனைவி ஆயிஷா என்றோ, அல்லது ஆயிஷா w/o முஹம்மது என்றோ ஒரு பெண் தன் பெயரோடு கணவனின் பெயரையும் சேர்த்து எழுதிக்கொள்ளலாம்.
இன்னார் மகள்,
இன்னார் மனைவி
என்று எழுத நபிமொழிகள் வழிகாட்டுவதால் அவ்வாறு குறிப்பிட்டு எழுதலாம் என்ற அனுமதிக்குத் தெளிவான ஆதாரங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் அதற்குத் தடையேதும் இல்லை!
இறைவனே மிக்க அறிந்தவன்.
No comments:
Post a Comment