அல்லாஹ்வின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டு
அன்பின்
அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. வணக்க வழிபாடுகள் மூலம் மட்டுமே
அல்லாஹ்வின் அருளை அடைய முடியும் - அதல்லாத வழிகளில் அடைய முடியாது என்று நிலவி
வந்த வறட்டுச் சிந்தனை வழியனுப்பி வைக்கப்பட்டது.
பெற்ற குழந்தைகள் மீது நாம்
பொழிகின்ற அன்பு மழையில், பரிமாறிக்
கொள்கின்ற பாச அலைகளில், அல்லாஹ்வின்
அருளை அடைய முடியும் என்று வளமான சிந்தனை வளர்க்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்து
கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி),
"எனக்குப் பத்து குழந்தைகள்
இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார்.
அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்பு
காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா
(ரலி),
நூல் : புகாரி 5997
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 5998
இந்த ஹதீஸ்கள், உனது
குழந்தையின் பூ முகத்தில் நீ பதிக்கின்ற முத்தங்கள் இறைவனின் அருளைப் பெற்றுத்
தரும் என்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு குழந்தைகளை முத்தமிடாதவரது இதயத்தில் அன்பை
அல்லாஹ் எடுத்து விட்டான், அவருக்கு அல்லாஹ்வின் அன்பு கிடைக்காது என்று நபி (ஸல்)
அவர்கள் கூறுவதை நாம் காண முடிகின்றது.
தொழுகை, தஸ்பீஹ், திக்ர், நோன்பு
ஆகிய வணக்கங்கள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்ற எண்ணத்தை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தகர்த்தெறிகின்றார்கள். அதனால் தான் தொழுகை
என்பது அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் நடத்துகின்ற உரையாடல் என்றிருப்பினும்
குழந்தையின் அழுகைக் குரல் காதில் விழுந்து விட்டால் அதை அப்படியே சுருக்கி
விட்டிருக்கின்றார்கள் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
"நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத்
துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (என்னைப்
பின்பற்றித் தொழும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமம் அளிக்கக் கூடாது
என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகின்றேன்'' என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா
(ரலி),
நூல் : புகாரி 707, 709, 710
சோறு கொடுத்தால் சொர்க்கம்
தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக்
கொண்டு என்னிடத்தில் ஓர் ஏழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம்
பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக்
கொடுத்து விட்டு, ஒரு
பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார்.
அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன! தான் சாப்பிட
நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம்)
கொடுத்தார். அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவர் செய்த
அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு
அவர்கள், "இதன்
மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்'' என்றோ அல்லது "அப்பெண்ணுக்கு
நரகிலிருந்து விடுதலை அளித்து விட்டான்'' என்றோ கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல்
: முஸ்லிம் 4764
பாருங்கள்! தனக்கின்றி தான்
பெற்ற குழந்தைக்கு வழங்கும் அந்தத் தாய்க்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம்
என்கின்றார்கள். அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குக் காட்டிய கருணைக்காக - ஊட்டிய
பேரீச்சம்பழங்களுக்காக இறைவன் அவரை சுவனத்திற்குக் கொண்டு செல்கின்றான்.
இன்று நம்முடைய புண்ணியமிகு
தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்குக் கூட வருத்தமாக உள்ளது. அல்லாஹ் தன்
திருமறையில் இரண்டு ஆண்டுகள் தாய்ப் பாலூட்டுமாறு கட்டளையிடுகின்றான். இதை இந்தத்
தாய்மார்கள் பொருட்படுத்துவது கிடையாது. பாலூட்டுவதால் தங்கள் மேனி கட்டழகு கெட்டு
விடும் என்று கற்பனை செய்து தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய மனிதாபிமானக்
கடமையைச் செய்யத் தவறி விடுகின்றார்கள்.
நம்மைச் சுற்றி வலம்
வருகின்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தாங்கள் ஈனுகின்ற குட்டிகளுக்குப்
பால் கொடுக்கத் தவறுவதில்லை. ஆனால் மனித இனத்தைச் சேர்ந்த இந்தப் புனிதவதியோ பெற்ற
பிள்ளைக்கு "புட்டி' பாலைக் கொடுத்து, அந்தப் பால் மாவில் கலந்துள்ள இரசாயனக் கலவையின் மூலம்
குடலில் கோளாறு ஏற்பட வழிவகுக்கின்றாள்.
ஒரு குழந்தை அரை மணி நேரம்
குடிக்கும் தாய்ப்பால் அதன் ஆயுள் முழுமைக்கும் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக்
கொடுக்கின்றது என்று மருத்துவம் கூறுகின்றது. இந்தத் தாய் அதையெல்லாம் கண்டு
கொள்ளாது காலா காலம் நோயில் சிக்கித் தவிக்க வழி வகுக்கின்றாள். இது மனிதப் பண்பா? என்பதைச்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள்
குழந்தைகள் மீது உண்மையான பாசத்தைக் காட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும்.
நாகரீக மோகத்தில் இராப்
பகலாய் பொருளீட்டுவதற்காகப் பாடுபடுகின்ற இயந்திர வாழ்க்கையில் தய் தந்தையர்கள்
தங்கள் பிள்ளைகளைக் குழந்தைக் காப்பகங்களில் விட்டு விடுகின்றனர். அல்லது உறவினர்
வீட்டில் விட்டு விட்டு அரபு நாட்டில் ஐக்கியமாகி விடுகின்றார்கள்.
இந்தக் குழந்தைகளுக்கு
உயர்தரமான உணவு, உறைவிடம், வாகனங்கள் என்று எல்லாவித வசதிகளும் தாராளமாகக்
கிடைக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான தாயின் அன்பு அரவணைப்பு, தந்தையின்
பாசப் பிணைப்பு கிடைக்காமல் விரக்தியாக, மனித சடலங்களாக வளர்கின்றனர். உலகத்தை வெறுத்து, வெறித்துக்
பார்க்கின்றனர். இந்த வெறுமை அக்குழந்தைகளை ஒரு கால கட்டத்தில் தடம் புரள வைத்து
விடுகின்றது.
இப்படிப்பட்ட படு மோசமான
நிலைகளை விட்டு நீங்கி, குழந்தைகளுடன் பாசப் பிணைப்புடன் வாழ வேண்டும். குழந்தைகள்
மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய அன்பு அரவணைப்பை நாமும் காட்ட
வேண்டும்.
குழந்தைகளுடன் இரண்டறக் கலந்து விடுதல்
நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே
நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூ உமைர் என்று அழைக்கப்பட்ட ஒரு தம்பி
இருந்தார். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே
எண்ணுகின்றேன். நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்தால்),
"அபூஉமைரே! பாடும் உன்
சின்னக் குருவி என்ன செய்கின்றது?'' என்று கேட்பார்கள். அவன்
அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி 6203
ஹராம் ஹலாலைக் கற்றுக்
கொடுத்தல்
ஹஸன் (ரலி) ஸதகாப் பொருளான ஒரு
பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்,
"சீ, சீ,'' எனக் கூறி துப்பச் செய்து விட்டு,
"நாம் தர்மப் பொருளைச்
சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 1491
கையிலெடுத்துக் கொஞ்சுதல்
நபி (ஸல்) அவர்கள் என்னையும், ஹஸன் (ரலி) அவர்களையும்
கையிலெடுத்து, "இறைவா!
இவர்கள் இருவரையும் நான் நேசிக்கின்றேன். நீயும் நேசிப்பாயாக!'' என்று பிரார்த்திப்பார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத்
(ரலி),
நூல் : புகாரி 3735
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு
ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப் பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர்
கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதை சிறுநீர் பட்ட இடத்தில்
ஊற்றினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 222
குழந்தைகளின் மீது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் போல் அன்பு காட்டி, அரவணைத்து, அவர்களுக்கு
நேர்வழியைக் கற்றுக் கொடுத்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!
No comments:
Post a Comment