Sunday 26 May 2013

பாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும் பெண்களைப் புற்று நோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!



இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டுநடப்புகள்

இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது.

புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பார்களேயானால் குழந்தைகளும் சரியான நோய் எதிர்ப்பு சக்தி பெறாமல் சீரழிவதோடு, பெண்களுக்கும் இதனால் புற்றுநோய் ஏற்படுகின்றது என்றும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :

இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம், பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி மையமும், அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் 34 சதவிகிதம் தம்மை நோயிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வழிமுறைகள் வருமாறு:

•ஆரோக்கியமான உடல் எடை,

•சுறுசுறுப்பாக இருத்தல்,

•உடல் எடையைக் கூட்டும் உணவுப்பொருட்கள் பானங்களைத் தவிர்த்தல்,

•தாவர உணவு வகைகளையே அதிகம் உட்கொள்ளுதல்,

• மது அருந்துவதைத் தவிர்த்தல் மற்றும்

• 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் அளித்தல்

மேற்கண்ட விஷயங்களை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று இந்த ஆய்வு கூறுகின்றது.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இந்த ஆராய்ச்சியை வழி நடத்தியவர். இந்த வழிமுறைகளை பின்பற்றுவோருக்கு புற்றுநோய், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் கூறியுள்ளார்.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

அல்குர் ஆன் 31 : 14

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிறவனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார்.

அல்குர் ஆன் 2 : 233

மேற்கண்ட வசனங்களில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.

தங்களது குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில்தான் இறைக்கட்டளையாக போடப்பட்டுள்ளது. வேறெந்த மதமோ, சித்தாந்தமோ பாலூட்டுவதை கட்டளையாகப் போடவில்லை.

இஸ்லாம் கட்டளையிடக்கூடிய ஒவ்வொரு வழிமுறையும் மனித குலத்துக்கு நன்மைப் பயப்பதாகவே அமைந்துள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உண்மைப்படுத்துகின்றன.

http://www.onlinepj.com/unarvuweekly/palootuvathu_putrunoyai_thadukum/

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts